Wednesday, May 20, 2020

உயிரூட்டும் செய்யுள்கள்



                     உயிரூட்டும் செய்யுள்கள் 

                          வே.. அனந்தநாராயணன் (அனந்த்)

யாப்பிலக்கணம் வழுவாமல் இயற்றப்பட்ட கவிதை ஒன்றின் எழுத்துக்கள் ஒரு ஓவிய அமைப்புக்குள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அடக்கப்படுமாறு இயற்றப்படும் கவிதை சித்திரக் கவி அல்லது சித்திரச் செய்யுள் என்று பெயர் பெறும். இக்கவிதை இனம் பற்றிய மேலதிகச் செய்திகள் கொண்ட  கட்டுரை ஒன்றை இந்த வலைப்பூவின் சந்தவசந்தம் பகுதியில் காணலாம்.  ஒரு எடுத்துக்காட்டாக, அக்கவியரங்கத்தில் நான் இட்ட ஒரு சித்திரச் செய்யுள் :
பிணைந்துள்ள பாம்புகள் ஒவ்வொன்றிலும் உள்ள எழுத்துக்களைத் தலைப்பாகம் தொடங்கி, வால் பாகத்தின் இறுதிவரை படித்தால் இரண்டு வெவ்வேறான (ஒன்று இன்னிசை வெண்பா, மற்றது நேரிசை வெண்பா வகை) பாடல்கள் கிட்டும். இவை இரண்டிற்கும் பொதுவாக உள்ள பல எழுத்துகளை முன்கூட்டியே யோசித்துச் செய்யுளில் அமைத்து எழுத வேண்டும்.   
கவியரங்கத்தின் இறுதிப் பகுதியில், பகவான் ரமண மஹர்ஷியின் பாடல் ஒன்றில் காணும் சொல் அமைப்பை ஒரு ”சுருள் இணை” (a pair of interacting helices in a zipper arrangement) வடிவச் சித்திர கவியாகத் தந்திருந்தேன்.  

உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா – லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்.  (‘உள்ளது நாற்பது’)


















இவ்வடிவம் புரதங்கள் பலவற்றில் காணப்படுவதையும் சுட்டியிருந்தேன்.  அதையொட்டி, மேலும் சில செய்திகளை இங்குப் பரிமாறிக் கொள்ளலாம் எனத் தோன்றியது.

புரதங்களும், மரபணு மூலக்கூறுகளான டீஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற உயிரியல் தொடர்பான, அளவில் பெரிய மூலக்கூறுகள், பல சிறிய மூலக்கூறுகளின் கோப்பாக அமைந்தவை. நம் உடலில் காணப்படும் 25-ஆயிரத்திற்கும் மேலான புரதங்கள் யாவும், 21 வகையான ’அமைனோ ஆசிட்’ எனப்படும் சிறிய மூலக்கூறுகளை வெவ்வேறு வகைகளில் தொடுக்கப்பட்ட சங்கிலிகளாக அமைந்தவை. டீஎன்ஏ, ஆர்என்ஏ மூலக்கூறுகள் பெரும்பாலும் நான்கே வகையான நியூக்ளிக் ஆசிட் எனப்படும்  மூலக்கூறுகளைப் பல்வேறு வகையில் தொடுத்து அமைந்த சங்கிலிகளாக அமையும். இந்தச் சங்கிலி போன்ற கோப்பை முதல்நிலை வடிவம் (ஆங்கிலத்தில் primary structure) என்பார்கள்.  இவற்றிற்கும் சித்திரகவிச் செய்யுள்களுக்கும் அவற்றின் வடிவங்களுக்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக எனக்குப் படுகிறது. அதை விளக்க எழுந்ததே இந்தக் கட்டுரை.

எனது கண்ணோட்டத்தின்படி, புரதங்கள்,  டீஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற பெரிய அளவு மூலக்கூறுகளின் அடிப்படை மூலக்கூறுகளைச் செய்யுள்களின் அடிப்படையான எழுத்துக்களோடு ஒப்பிடலாம்.  எப்படிச் செய்யுள் எழுத்துக்களைக் குறிப்பிட்ட விதங்களில் அமைத்தால் பல்வேறு வகையான சித்திரச் செய்யுள் அமைப்புகள் எழுகின்றனவோ அதுபோலவே, உயிரினங்களில் காணப்படும் சங்கிலி போன்ற நீண்ட  மூலக்கூறுகள் இயற்கையாகவே, இயற்கையின் இலக்கண  விதிகளின்படிப் பல்வேறு வடிவங்களை மேற்கொள்வதைக் காணலாம்.   அவற்றில் ஒன்றான ‘லூசீன் ஜிப்பர்’ வடிவை இந்த வலைப்பூவின் சந்தவசந்தம் பகுதியில் உள்ள ”சித்திரச் செய்யுள்” கட்டுரையில் சுட்டியுள்ளேன். அவ்வடிவைப் போன்ற மேலும் பற்பல வகையான முப்பரிமாண வடிவங்களைப் புரதங்கள், நியூக்ளிக் ஆசிட்  சங்கிலிகள் (primary structure) மேற்கொள்வதைக் கடந்த 60,70 ஆண்டுகளில் உயிரியல், உயிர்வேதியியல் ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

புத்தம் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு புரதம் தொடக்கத்தில் ஒரு ஒழுங்கான வடிவ அமைப்பை மேற்கொள்ளாமல், எண்ணற்கரிய வடிவங்களின் கூட்டாகக் காணப்படும்; அது இப்புரதத்தின் முதல்நிலை வடிவம் (primary structure); அடுத்து, பட்டை, சுருள் (corrugated strip or sheet) போன்ற அமைப்புகளைக் கொண்டது இரண்டாவது நிலை வடிவம் (secondary structure);  இந்நிலை வடிவங்கள் ஒன்றோ பலவோ கூட்டாகச் சேர்ந்தது மூன்றாவது நிலை வடிவம் (tertiary structure);  இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைவது நான்காவது நிலை வடிவம் (quaternary structure).  

சித்திரச் செய்யுள் ஒன்றின் எழுத்து வடிவத்தை புரதத்தின் முதல்நிலை வடிவத்தோடு ஒப்பிடலாம். அச்செய்யுள் கவிஞன் தேர்ந்தெடுத்த சித்திர வடிவத்திற்குள் அமைக்கப்பட்ட நிலையைப் புரதத்தின் இரண்டாவது நிலை வடிவத்தோடு ஒப்பிடலாம். எனினும், பெரும்பாலான புரதங்களின் இரண்டாவது நிலை வடிவங்கள் இரண்டே பரிமாணம் கொண்ட சித்திரம் போலன்றி, முப்பரிமாணம் கொண்டு திகழ்வதை நினைவிலிருத்த வேண்டும்.  சித்திரச் செய்யுளை  முப்பரிமாணம் கொண்ட சித்திர வடிவங்களில் உள்ளடக்கி அமைப்பது மிகவும் சிரமமான, இதுவரை முயலாத ஆனால் முடியக்கூடிய சாதனையே.   

இனிப் புரதங்களில் காணும் சித்திர வடிவங்களுக்கான ஓரிரு எடுத்துக்காட்டுகள் கீழே:

1. இரத்தத்தில்ஆக்ஸிஜனைச் சுமக்கும் ஹீமோக்ளோபின்; மேலிருந்து கீழாக, முதல் நிலை (primary structure); பட்டை, சுருள் போன்ற அமைப்புகளைக் கொண்ட இரண்டாவது நிலை வடிவம் (secondary structure); முதல் நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த மூன்றாவது நிலை வடிவம் (tertiary structure); நான்கு ஹீமோக்ளோபின் மூலக்கூறுகளின்  மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த நான்காவது நிலை வடிவம் (quaternary structure) என்ற முப்பரிமாண அமைப்புக்கள் காட்டப்பட்டுள்ளன.      



                                  
2. மற்றொரு புரதத்தின் நான்காவது நிலை அமைப்பு:

3. நியூக்ளிக் ஆசிட் அமைப்பு. இடமிருந்து வலம்: முதல், இரண்டாவது, மூன்றாவது நிலை வடிவங்கள்.  




4. சில வைரஸ்களின் வடிவங்கள்: இவை, ந்யூக்ளிக் ஆசிட் ஒன்றை மையமாகக் கொண்டு பல புரதங்களின் மூன்றாவது நிலை வடிவங்களின் கூட்டாக அமைந்த மாபெரும் ‘சித்திரச் செய்யுள்களாகக்’ காட்சியளிப்பதைக் கண்டு வியக்கலாம். 


           

இப்போது கூறுங்கள், நம் உடலில் இருக்கும் மூலக்கூறுகளை உயிரூட்டும் சித்திரச் செய்யுள்களாகக் கருதலாம் தானே?

மேலதிகமாகச் சில செய்திகளைத் தரலாமென நினைக்கிறேன்.
நான் உயிர்வேதியியல் பேராசிரியராகப் பணி புரிகையில், புரதங்களின் வெவ்வேறு வகையான அற்புத முப்பரிமாண அமைப்புகள் ( 3-dimensional structure (or 'conformation' of proteins)  பற்றியும் அவை எவ்வாறு அம்மூலக்கூறுகள் தத்தம் தொழில்களை ஆற்றத் துணை செய்கின்றன என்பது பற்றியும்  மாணவர்களுக்கு வகுப்பில் விவரிப்பது எனக்குப் பிடித்தமான வேலை. அத்துடன், அவ்வடிவங்களின்  கலையழகு பற்றியும் பேசுவதுண்டு. நான் ஆய்வு தொடங்கிய நாள் முதல் இன்றுவரை கடந்த 50+ ஆண்டுகளாகப் புரதங்கள் இத்தகைய வடிவங்களை மேற்கொள்வதற்கான பௌதிக-இரசாயன விதிகள் யாவை என்ற கேள்விக்கு முழுதுமான விடை கிட்டியதில்லை. இவ்வடிவங்கள் புரதங்கள் (-அவை போல, நியூக்ளிக் ஆசிட், பிற மூலக்கூறுகள்) உடலில் ஆற்றும் பணிகளோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.



என்பதால், மேற்சொன்ன விதிகளை நாம் அறிந்தால், அவை மீறப்படும்போது நிகழும்  வியாதிகள் (அநேகமாக எல்லா நோய்கள்) பற்றிய அடிப்படை அறிவும் அவற்றைக் குணப்படுத்தும் வழியும் பற்றி அறியலாம் என்பதால், மருத்துவத் துறைக்கு இந்த வடிவம்-வேலை (Structure-Function) தொடர்பு பற்றிய அறிவு மிகவும் பயன்படும்.
நடைமுறையிலும் நாம் காணும் (கை, கால், நாற்காலி, கூடை, பூட்டு-சாவி.. போன்ற) பொருள்களின் தூல வடிவங்கள் அப்பொருள்கள் ஆற்றும் செயல்பாடுகளோடு தொடர்பு கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

இப்போது ஒரு கேள்வி: இத்தகைய வடிவம்-வேலை (Structure-Function) தொடர்பு சித்திர கவிதைகளில் காணப்படுகிறதா? பொதுவாகச் சொன்னால், இல்லையெனத் தோன்றுகிறது. ஏனெனில் கவிதைகளின்பணிஅல்லது பயன் அவற்றைச் சுவடியிலோ கணினியிலோ படிக்கையில்) அவற்றின் எழுத்துக் கோப்பிலேயே கிட்டிவிடுகிறது. எனினும், செய்யுட்களில் பயிலும் (பாவகைக்கேற்ற) அமைப்பும் ஓசை நயமும் படிப்பவரின் அனுபவத்தைக் கூட்டவோ கழிக்கவோ இயலுமென்பதால், இந்த அனுபவம் தருவதைச் செய்யுளின்பணிஎனக் கொள்ளலாம். இவ்வகையில் சித்திரச் செய்யுள்கள் யாப்பு விதிகளுக்கு மட்டுமன்றி, தூல வடிவம் பற்றிய விதிகளோடு அமைக்கப் பெறுவதால், அதிகப்படியான ஒரு அனுபவத்தை நமக்குத் தருகின்றன. நமது கவியரங்கத்திலும், பயிற்சித் தளத்திலும் இடப்படும் சித்திரக் கவிதைகளும் இதற்குச் சான்று.
சமய நூல்களில், மந்திரங்களை (முக்கோணம், எண்கோணம், சக்கரம் போன்ற) குறிப்பிட்ட வடிவங்களில் எழுதுகையில் கிட்டும் ஆன்மிகப் பயன்கள் பற்றிப் பேசப்படும். சித்திரச் செய்யுட்களையும் அவ்வகையில் கருதுவதுண்டு. அவற்றை ஆலயங்களில் வரைவதும் உண்டு.


சித்திர கவி அமைப்புகளில் எனக்கும் நாகபந்தம்’ என்னும் சித்திர கவிதையில் பயன்படுத்தப்படும் பாம்பின் வடிவத்திற்கும் ஒரு தனி பந்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில், புரதம் பற்றிய எனது உயிர்வேதியியல் வகுப்புகளில், நான் புரதங்களைப் பாம்புகளோடு ஒப்பிடுவதுண்டு. காரணம், நம் உடலில், அமைனோ அமிலங்களின் (amino acids) தொகுப்பான ஒரு சங்கிலியைப் போல உருவாகும் புரதங்கள் தங்கள் பிறப்பிடமான ரைபோஸோம் கூட்டிலிருந்து வெளிவருகையில் பாம்புகள் போலப் பல்வகையில் நெளிந்து, நீண்டும் சுருண்டும் பலவகையான உருவங்களோடு வெளிவரும். இதைக் கவிதைக்கான எழுத்துகளை, ஒருவகைத்தான குறிப்பிட்ட வடிவத்திலன்றிக் கோடிக்கணக்கான உரைநடை அல்லது பாவடிவங்களிலோ அமைப்பது போல எண்ணலாம். (எவ்வாறு ஒரு பாம்புகள் நிறைந்த பள்ளத்தில் (snake pit) ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொரு கணத்திலும் வெவ்வேறு வடிவங்கள் பூண்டு நெளியுமோ அதுபோல ஆனால் அதற்கும் மேலான எண்ணிக்கையில்.

ஆனால், என்னே அதிசயம்! மிக விரைவில் (1-20 நிமிடங்களுக்குள்) ஒவ்வொரு புரதமும் தனக்கே உரித்தான ஒரு தனிவடிவை மேற்கொண்டு விடுவதைப் பார்க்கிறோம். இது, ஒவ்வொரு பாடலும் ஒரு தனிப்பட்ட சித்திரகவி அமைப்பைத் தேர்ந்துகொள்வது போன்றது. இப்படித் தேர்ந்தெடுப்பதற்கு எந்த பௌதிக-இரசாயன விதிகளைப் பின்பற்றுகின்றன என்ற ஆய்வு பல நோபல் பரிசுகளை வாங்கித் தந்திருக்கிறது, ஆனால் முடிவான விளக்கம் இன்னும் கிட்டியபாடில்லை:

இப்புரதங்களின் முழுமையான முப்பரிமாண வடிவங்களுக்குள் பல இடங்களில் வடிவ அமைப்பில் (சுருள் (helix), பட்டை (sheet) போன்ற) ஒற்றுமை இருப்பினும் அவற்றிலுள்ள அமைனோ அமிலங்களின் கோப்புகள் வெவ்வேறாக இருப்பன.
பாம்புகளும் சுருள் போன்ற வடிவங்களை மேற்கொள்வதாகச் சித்தரிக்கும் கார்ட்டூன்களை கேரி லார்ஸன் (Gary Larson) என்னும் கார்ட்டூன் கலைஞரின் படைப்புகள் பலவற்றில் நான் கண்டதுண்டு. காட்டாக ஒரு படம் கீழே:

எனவே என் உயிர்வேதியியல் வகுப்புகளின் தொடக்கத்தில் அவரது படங்களில் ஒன்றை முதலில் திரையில் காட்டிய பின்னரே எனது உரையைத் தொடங்குவது எனது வழக்கம். இதன் வழியாக, மாணவர்களின் கவனத்தை முழுமையாக இழுத்து வைப்பதும் சாத்தியமாகும்! 


இனி, புரதத்தின் அளவு பெரிதாக ஆகப் புரதங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட முப்பரிமாண அமைப்புகளை மேற்கொள்ளும்; இது சித்திரச் செய்யுளின் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு  சித்திர கவி வடிவங்களில் அமைப்பதைப் போன்றது (இதை இங்குள்ள சித்திர கவிஞர்கள் முயன்று பார்க்கலாம்!). இதற்கு அடுத்த நிலையில் ஒரே புரதத்தின் மூலக்கூறுகள் இரண்டோ பலவோ சேர்ந்து மேற்கொள்ளும் முப்பரிமாண வடிவங்கள் உள்ளன; ஆங்கிலத்தில் இதை quaternary structure என்பர்.  

இவற்றில் சிலவற்றை முன்னிடுகையில் உள்ள படங்களில் கண்டோம்.
புரதங்களைப் போல, டீ.என்.ஏ. போன்ற மூலக்கூறுகளும் தமக்கே உரித்தான வடிவங்களை தமது 4,5 வகையாக நியூக்ளிக் அமில மூலக்கூறுகளின் தொடுப்பிற்கேற்ற வண்ணம் மேற்கொள்ளும். க்ரோமோசோம் என்னும் மரபணுவில் விதவிதமான டீஎன்ஏ அமைப்புகளைக் காணலாம்:

 
இறுதியாக, நம் உடலிலுள்ள புரதங்கள், ந்யூக்லிக் ஆசிட் போன்ற மூலக்கூறுகள் மேற்கூறியபடி பல்வகையான சித்திர கவி அமைப்புகளைப் போலவும் மேலதிகமாகவும் கொண்டு தமது பணிகளைச் செய்வதைப் பார்க்கையில், நாம் நம்முடைய சொந்தக் கற்பனையிலிருந்து உண்டாக்கும் அழகழகான வடிவங்களை (சித்திர கவி வடிவங்கள் உட்பட!), கண்ணுக்குத் தெரியாமல் நம் உடலுள் வாழும் மூலக்கூறுகள்தாம் தீர்மானிக்கின்றனவோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. கீழே காணும் சித்திரங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன (முதல் படத்தில், கோப்பை, ஜாடி போன்றவைகளில் காணும் வேலைப்பாடுகள் புரதங்கள் மேற்கொள்ளும் அடிப்படை அமைப்புகளை (protein motifs like Greek Key motif) ஒத்திருப்பதைக் காட்டுகின்றன. 

கீழே தந்துள்ள படங்களில் இடப்பக்கம் உள்ளவை  நடைமுறையில் நாம் காணும் கலைப்படைப்புகள்,  வலதுபக்கம் உள்ளவை புரதங்களிலும், வைரஸ் என்னும் உயிரிகளிலும் காணப்படும் வடிவங்கள். 
  
இதுபோலகூடைகளிலும் கோலங்களிலும் காணும் சித்திர அமைப்புகளும் உடலுள் வாழும் மூலக்கூறுகளில் இருப்பதை உயிர்வேதியியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளில் (?) காண்கிறோம். 


கூடையின் அடிப்பாகப் பின்னல் வடிவமைப்பு                                      Zika-வைரஸ்ஸின் புரதங்களின் அமைப்பு.

ஆக, . நம் பெருமையாகக் கூறிக்கொள்ளும் நமது கற்பனை ஆற்றல் இவ்வளவு தானா?? மேலும் பார்க்கப் போனால், ஒரு அணுவிலிருந்து இந்தப் பிரபஞ்சம் வரை எங்கும் சித்திரகவி போன்ற அமைப்பு பரந்து காணப்படுவது,  இயற்கையின் சித்திரக் கலைத் திறனை நம் மனத்தில் ஆணியறைந்தாற் போல உணர வைக்கிறது:


அணுவின் அமைப்பு


    
அகிலத்தின் அமைப்பு

இதையெல்லாம் பார்த்தால், நாம் நமது கற்பனை என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் கலை வடிவங்களுக்கு அடிப்படைக் காரணமாய் இருப்பவை உயிரினங்களின் உடலுள் இருக்கும்  மூலக்கூறுகள் தாமோ? என்ற ஒரு கேள்வி நம்முள் எழுகிறது.  அதை மேலும் ஊர்ஜிதப் படுத்துவது போல உள்ளது, கீழுள்ள சுட்டியில் காணும் ஒரு சிறு மீனின் “கற்பனை”யில் உருவாகும் ”சித்திரக் கவி”: https://www.youtube.com/watch?v=B91tozyQs9M






இதைப் போலவே, சிலந்தியின் வலை, தூக்கணாங் குருவிக் கூடு, இலைகள், பூக்கள், காய் கனிகளில் காணும் ஒழுங்கு வடிவங்கள் ஆகியவற்றிற்கும் நமது உடலினுள்ளும், வெளிப்புறத்திலும் நாம் காணும் உயிர்ச் சித்திரங்களே நமது கற்பனையில் எழும் ஓவிய, சிற்ப வடிவங்களுக்குக் காரணமாக இருக்கலாம். மேலும், உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையான தண்ணீரின் பலவகையான பனிக்கட்டிகள் மேற்கொள்ளும் ஒழுங்கு வடிவங்களும், கோள்கள் விண்மீன்கள் போன்றவற்றின் அமைப்புகளும், மனிதனுக்குச் சுயமாகக் கற்பனை என்று ஒன்று உள்ளதா என்ற வினாவிற்கு ஊட்டம் தருகின்றன.  இதை உணர்ந்ததால் தானோ பிகாஸோ போன்ற கலைஞர்கள் ஒழுங்கற்ற (asymmetric) வடிவங்களைப் படைத்துத் திருப்தி கொள்கிறார்கள்?   

"கலையுணர்வும், கற்பனைத் திறனும், கவிப்புலமையும் ஒருங்கே பெற்று அமைப்பது சித்திரக் கவி” (1) என்று நம் பெருமையாகக் கூறிக்கொள்ளும் கவிதையில் காண்பவை நீளம், அகலம் என்ற இருபரிமாண அமைப்புக் கொண்ட ஒழுங்கு வடிவங்களே. முப்பரிமாண சித்திரக் கவிதைகளை அமைப்பது கடினம் எனினும் சாத்தியமெனத் தோன்றுகிறது; அவ்வாறு இதுவரை எவரும் முயன்றதில்லை. அதனினும் மேலான வகையில், புரதங்கள், நியூக்ளிக் ஆசிட் ஆகிய மூலக்கூறுகள் அடிப்படையான முப்பரிமாண வடிவங்களை மேலும் முப்பரிமாணத்தில் அடுக்கிப் பல்வகையான அமைப்புகளை மேற்கொண்டு நம்மை வியக்க வைக்கின்றன.   நமது கற்பனை ஆற்றல் இவ்வளவு தானாசிந்தியுங்கள் (சுயமாக!).      


---------------------------------------
துணை நூல்கள்:
1. வே.இராமாதவன், ‘சித்திரக் கவிகள்’ உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை (1983).
3.  ’சித்திரக் கவித்திரட்டு’, ஞா. பாலசந்திரன், ஞானம் வெளியீடு (2016)

No comments:

Post a Comment