Monday, November 5, 2018

புரட்சிக் கவிஞர் அருணகிரிநாதர்

புரட்சிக் கவிஞர் அருணகிரிநாதர் 



வே.. அனந்தநாராயணன்

அருணகிரிநாதர் என்ற பெயரைக் கேட்டவுடனே, “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண..” என்று தொடங்கும் சந்தம் ஒலிக்கும் திருப்புகழ் பாடல் ஒன்று நம் நினைவில் எழும். இப்பாடலைப் போல ஆயிரக்கணக்கான சந்தப் பாடல்கள் கொண்ட  திருப்புகழ் என்னும் அரிய நூலை மட்டுமன்றி மற்ற பல அரிய  படைப்புகளையும் இக்கவிஞர் பெருமான் தமிழ் அன்னைக்கு ஆரங்களாக அணிவித்திருக்கிறார். இவற்றில் மற்ற தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணாத புதுமைகள் பலவற்றை நாம் காண்கிறோம். இக்கட்டுரையில், அருணகிரிநாதர் இவ்வாறு செய்த தமிழ்ப் பணியின் அருமை பெருமைகளைச் சற்று ஆழமாகப் பார்ப்போம். அதன் மூலம், அவர் எவ்வாறு ஒரு புரட்சிக் கவிஞராகத் தோன்றித் தமிழுக்கு மட்டுமன்றி சமுதாயத்திற்கும் புதுமையான ஒழுக்க நெறி ஒன்றைக் காட்டினார் என்பது தெளிவுறும்.

சமுதாய நெறி:  அருணகிரியார் 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்தார் என்று ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். அக்கால கட்டத்தில், தமிழ் நாட்டில் வேற்று மொழி இனத்தவரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உருது, பாரசீகம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் தாக்கம் மட்டுமன்றி ஆதிக்கமும் தலைதூக்கித் தமிழை, தமிழரைப் பின்னணிக்குத் தள்ளிவந்த வேளை அது. அதன் விளைவாகத் தமிழ் மக்களின் மொழி, சமயம், சமுதாயம் ஆகிய மூன்றும் முன்னிருந்த ஒழுங்கு நிலையிலிருந்து பிறழ்ந்து, அவரிடையே வேற்றுமை உணர்வுகளை வளர்த்து வந்தன. சங்க இலக்கியங்களிலோ அவற்றின் பின்னர் வந்த சைவ, வைணவப் பக்தி இலக்கியங்களிலோ மக்களுக்கிருந்த நாட்டம் குறைந்தது. அந்நிய மொழிகளில், குறிப்பாக, வடமொழியில் பற்று, சைவ வைணவச் சமயப் பூசல்கள் என்பனவாகத் தமிழரினம் நெறி தவறிப் போய்க்கொண்டிருந்தது. இதை உணர்ந்த அருணகிரியார் தமது படைப்புகள் வழியாக அந்நிலையை மாற்ற முயன்றார். வடமொழியில் அமைந்த வேத, இதிகாச, புராணங்களை நாடித் தமிழைப் புறக்கணித்த மாந்தரை வழிக்குக் கொண்டுவருவதற்கு ஒரு உத்தியாகத் தமது தமிழ்ப் படைப்புகளை, குறிப்பாகத் திருப்புகழில், வடமொழிச் சொற்களைப் பரவலாகக் கலந்து, மணிப்பிரவாள நடையில் அமைத்தார். வடமொழியை வாடாமொழி என்றும் தென்மொழியைத் தேன்மொழி என்றும் கருதிய அருணகிரி, அவ்விரு மொழிகளையும் கலந்து தம் செய்யுட்களில் நெஞ்சை அள்ளும் சந்த நடையையும், அரிய சமயக் கருத்துக்களையும் புகுத்தி, திருப்புகழை மந்திர ஒலி அமைந்த ஒரு தெய்வீக நூலாக்கினார்.

இவ்வாறமைந்த திருப்புகழை விரும்பிப் படித்த மக்களுக்குச் சமய சமரச உணர்வு வருவதற்காக அருணகிரிநாதர் தம் பாடல்களில் தாம் விரும்பித் தொழுத முருகப் பெருமானுக்கும் திருமால், சிவன், சக்தி, கணபதி ஆகிய தெய்வங்களுக்கும் இடையே உள்ள உறவை நினைவுறுத்தி, அத்தெய்வங்களின் குணங்களைப் பல வகையாகப் போற்றிப் பாடினார். இதற்கு எடுத்துக் காட்டாகச் சில பாடல்களைப் பார்ப்போம். ”கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிஎன்ற திருப்புகழின் தொடக்கப் பாடலில், விநாயகப் பெருமானை அற்புத வருணித்துப் போற்றும் வேளையில், ‘உத்தமி புதல்வன்என்று கூறி உமையவளையும், ’முப்புரம் எரிசெய்த அச்சிவன்என்று சிவ பெருமானையும், கணேசன் தயவால் வள்ளியை மணம் புரிந்த முருகனையும் சேர்த்துத் துதிப்பதைப் பார்க்கிறோம். இந்தக்கூட்டு வழிபாட்டைஇன்னும் பல பாடல்களிலும் காணலாம்;

குமரி காளிப யங்கரி சங்கரி
     கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
          குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
     வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
          குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
     அணிக ஜானன விம்பனொர் அம்புலி
          மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே
(பாடல் தொடக்கம்: கமல மாதுடன்)

இதுபோலத் திருமாலை நாரணனாகவும், கண்ணனாகவும், இராமனாகவும், நரசிம்மனாகவும் பலப்பல வடிவங்களில் பல திருப்புகழ் பாடல்களில் வருணித்துத் தம் அகன்ற சமய நோக்கை உறுதிப்படுத்துகிறார் அருணகிரியார். ஒரு சில காட்டுகள்:

நவநீத முந்திருடி உரலோடெ ஒன்றும்அரி
.. ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே

இரவி குலத்து இராசத மருவி எதிர்த்து வீழ்கடு
 .. இளையவ னுக்கு நீள்முடி அரசது பெற்று வாழ்வுற
 .... இதமொ டளித்த ராகவன் மருகோனே

திருப்புகழில் மட்டுமன்றி அருணகிரியாரின் திருவகுப்பு, விருத்தங்கள் ஆகிய சந்தப் பாடல்களிலும் இவ்வாறு பல தெய்வங்களை வருணிப்பதைக் காணலாம். காட்டாக:

அருண கணபண புயக சுடிகையின்
    அகில புவனமும் உதவு மலைமகள் 
அமலை யாரியை யந்தரி சுந்தரி
    யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி  
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி
    யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
    விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி 
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு
    சக்ரத லத்தித்ரி யக்ஷரிச டக்ஷரி 
ஆயிதிரு மைந தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர்
    ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன்

என்றுபூத வேதாள வகுப்பில்அன்னையின் புகழ்பாடி முருகனைப் போற்றுகிறார் அருணகிரியார். மதத்தின் பெயரில் சண்டைகள் நடந்து வந்த காலத்தில், எந்தக் கடவுளை வழிபட்டாலும் ஆன்மிகத் தேடலில் வெற்றி பெறலாம் என்பதை நம் சீர்திருத்தக் கவிஞர் மறைமுகமாகவும், நேரடியாகவும் தமது பாடல்கள் வழியே மக்களுக்கு உணர்த்திய விதம் வியக்கத் தக்கது. இதனை மேலும் வலியுறுத்த, ’அவிரோதம்என்னும் புதிய சமூக, சமயத் தத்துவத்தைத் திருப்புகழ் பாடல்கள் வழியே மக்களிடை பரப்பினார். சைவ வைணவ மதங்களிடையே இருந்த உட்பூசல்களையும், மதங்களுக்கிடையே நிலவிய வேற்றுமை உணர்வையும் மாற்றி மக்களை விரோத மனப்பாங்கற்ற நல்வழியில் செலுத்த, அன்பு, அகிம்சை, வாய்மை, அத்துவிதம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அவிரோதம் என்னும் கருத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார் அருணகிரியார் என்று நாம் கொள்ளலாம். ’உலகெலாம்’என்று சேக்கிழாரும் ’உலகம் யாவையும்’ என்று கமபரும் தத்தம் காப்பியங்களைத் தொடங்கி தம் பரந்த சமய நோக்கைக் காட்டியதைப் போல, அருணகிரிநாதர் ‘உலகெங்கும் மேவிய தேவாலயந்தொறும் பெருமாளே’ என்று முருகனைச் சமயச் சார்பு கடந்த பரம்பொருளாகக் கருத்திப் பாடினார். 

தமிழில் புதுமைப் புரட்சி:  இனி, அருணகிரியார் ஆற்றிய தமிழ்த் தொண்டின் அருமையைச் சற்று அலசுவோம். முன்பு .கூறியபடி, இயல், இசை, கூத்து என்ற மூன்று துறைகளிலும் பிற மொழிகளுக்கில்லாத தனிச் சிறப்புடன் வளர்ந்து வந்த தமிழ் மொழி தாம் வாழ்ந்த காலத்தில் தேய்ந்து போவதைக் கண்ட இப்புலவர் பிரான், தமிழர் அதுவரை கண்டிரா வண்ணம் புதுப்புது செய்யுள் இனங்களைப் படைத்தார். அவற்றில் முத்தமிழ் நயங்களும் புத்தொளியோடு பிரகாசித்து உலகோரை வியக்கச் செய்தன. குறிப்பாக, பிரமிக்கத் தக்க சந்த இலக்கணமும் இசை வடிவங்களும் புதிய கருத்துகளும் கொண்ட எழில் பொங்கும் சந்தப் பாடல்களை ஆயிரம் ஆயிரமாகத் திருப்புகழிலும் திருவிருத்தங்கள் (வேல், மயில், சேவல் விருத்தங்கள்), திருவகுப்புகள் ஆகிய படைப்புகளிலும் பயிலுமாறு செய்தார் இந்த மகாகவி. சந்தச் செய்யுளில் இத்துணை சாதனை படைத்தவர் இவருக்கு முன்பும் பின்பும் இலர் என்று நாம் அறுதியாகக் கூறலாம்.


இயல்தமிழ்:  அருணகிரியார் இயற்றமிழ் இலக்கியத்தில் புகுத்திய புதுமையை முழுமையாக உணர, அவர் பெரிதும் பயன்படுத்திய விருத்த வகைச் செய்யுள் பற்றிய சிறிய விளக்கத்தை இங்குத் தருவது அருணகிரியாரின் இயல், இசைப் புலமையை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும். நாம் காணும் விருத்தப் பாடல்களில் பெரும்பான்மையானவை அசை ஒத்து வந்த நான்கு அடிகள் கொண்ட செய்யுட்கள். இவற்றின் அசை அமைப்பை, ‘மா மா விளம் மா மா விளம்என்பது போன்ற பற்பலவாய்பாடுகளைஒட்டி வரையறுப்பர்யாப்பிலக்கணத்தில், எழுத்துகளுக்கு மாத்திரை என்னும் ஒலி அளவு தரப்படும். அதை ஒட்டி, சீர்கள் ஒரே மாத்திரை கொண்டு இயங்கும் வண்ணம் அமைவதுசந்த விருத்தம்எனப்படும். இதற்கு எடுத்துக் காட்டாக, நான்கு அடிகளும்தேமா புளிமா கூவிளம், தேமா, புளிமா கருவிளம்என்ற வாய்பாடு கொண்ட விருத்தத்தில் அடிதோறும் ஒத்த சீர்கள் ஒரே வகையான அசை அமைப்பு கொண்டு, சந்த ஒலியைத் தரும். இதற்கு அடுத்தபடியாக, சீர்களில் ஐந்து வகைத் தாள வகைகளில் குறிப்பிட்ட ஒன்று பயிலுமாறு அமைவதைத் தாளச் சந்த விருத்தம் என்பர். இதையும் அடுத்து, சீர்களின் கால அளவை (காலப் பிரமாணத்தை) குறிக்கும், ”தத்த, தாத்த, தந்த , தாந்த தன, தான தன்ன தய்யஎன்ற எட்டு வகை ஒலிகளைக் குறிப்பிட்ட விதத்தில் கோத்து வரும்சந்தக் குழிப்புப்படி அமைந்த செய்யுளைவண்ணச் சந்த விருத்தம்என்பார்கள். தமது பாடல்களை மக்கள் விரும்பிப் படித்துப் பாராயணம் செய்ய வண்ணச் சந்த அமைப்பு உதவும் என்று அருணகிரியார் எண்ணங் கொண்டார் எனத் தோன்றுகிறது. பெரும் கவிஞர்களும் இயற்றத் தடுமாறும் இலக்கணக் கடினம் வாய்ந்த இத்தகைய வண்ணச் சந்தங்களைத் திருப்புகழ், திருவிருத்தங்கள், திருவகுப்புகள் யாவற்றிலும் அனாயாசமாகக் கையாண்டு புதுமை  படைத்தார் அருணகிரிநாதர். யாவற்றிற்கும் மேலாக, திருப்புகழ்ப் பாடல்கள் சிலவற்றில் வல்லெழுத்துக்கள் மட்டுமாகவும், மெல்லெழுத்துகள் மட்டுமாகவும் பயிலும்படி அமைத்து இவர் விந்தைகள் புரிந்திருக்கிறார். அருணகிரிக்குப் பின்னர், இராமாயணத்தை வண்ணச் சந்த வடிவில் அமைத்த பாலபாரதி, வைணவத் திருத்தலங்கள் மீதான 108 சந்தப்பாக்கள் இயற்றிய குரவை இராமானுஜ தாசர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ’திறப்புகழ்நூல் இயற்றிய அழகுமுத்துப் புலவர், ரெட்டியபட்டி சுவாமிகள் போன்ற பிற கவிஞர்களும் இத்தகைய வண்ணச் சந்தங்களைக் கையாண்டுள்ளனர் எனினும், அருணகிரியாரின் அளவுக்கு இதுவரை யாரும் இவற்றை இயற்றியதில்லை. (மேற்குறிப்பிட்ட நூல்களில் வண்ணச் சரபத்தார் நூலைத் தவிர ஏனைய நூல்கள் தற்போது கிட்டுகின்றனவாகத் தெரியவில்லை).

சந்தம் மலிந்த திருப்புகழ் தவிர, கலிவிருத்தத்தில் அமைந்த கந்தர் அனுபூதி, கட்டளைக் கலித்துறையில் அமைந்த கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், சித்திர கவியைச் சார்ந்த இரத பந்த அமைப்புக் கொண்ட திருஎழுகூற்றிருக்கை போன்ற படைப்புகள் இவரது விரிந்து பரந்த யாப்பறிவைப் புலப்படுத்தும். கந்தர் அந்தாதியில் உள்ள செய்யுள் ஒன்று பாரதம் பாடிய வில்லிப்புத்தூராரைத் திணறவைத்து, அருணகிரிக்கும் அவருக்கும் நடந்த வாதத்தில் அவர் தம் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தது என்று செவிவழி வழங்கும் கதை ஒன்று குறிப்பிடும்: அச்செய்யுளாவது:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இசைத்தமிழ்:  இனி, இசைத் தமிழில் அருணகிரியார் நிகழ்த்திய அற்புதத்தைச் சற்றுக் காண்போம். பன்மொழித் தேர்ச்சி பெற்றிருந்ததோடு அன்றி, வடமொழியிலும், தமிழிலும் கிட்டிய இசை நூல்கள் அனைத்தையும் நன்கு கற்றுணர்ந்தவராய் விளங்கிய இவர், பல்வேறு இசை நுணுக்கங்களைத் தம் படைப்புகளில் புகுத்தியுள்ளார். திருப்புகழையும் திருவிருத்தங்கள், திருவகுப்பு ஆகியவற்றையும் அவற்றில் அமைந்துள்ள சந்தக் குழிப்பை ஒட்டிய வண்ண அலகீட்டின்படி படிக்கையில் அங்குப் பொதிந்துள்ள இசை பரந்த மெட்டு வகைகளிலும் தாள வகைகளிலும் விரிந்து, அவ்வண்ணம் பாடுவோரையும் கேட்போரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். (இவ்வகையில், தமிழிலும் இசையிலும் வல்லுநராகிய திரு. வே. இராகவன் என்னும் பேரறிஞர் ஐந்நூற்றுக்கும் மேலான திருப்புகழ் பாடல்களுக்கு அவற்றின் சந்தக்குழிப்பிற்கும் சொல்லமைப்பிற்கும் தக்க இராகங்களையும் தாளங்களையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து இசை அமைத்துள்ளார். இப்பாடல்களைத்  ’திருப்புகழ் இசை வழிபாடுஎன்னும் அமைப்பில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் ஆயிரக்கணக்கான திருப்புகழ் அன்பர்கள் பாடும்படி பயிற்சி தந்துள்ள இவரது  பெரும் பணியை இங்குக் குறிப்பிடல் வேண்டும்.)  தமிழ், கருநாடக இசையில் உள்ள 35 தாள வகைகளின் மேலாக வெவ்வேறு மாத்திரை அளவுகள் கொண்ட பல அங்க தாளங்களைத் தம் வண்ணப் பாடல்களில் பயிலச் செய்த அருணகிரியாரின் திறனை இசை விற்பனர்கள் வியந்து போற்றுவர். ’நாத ரூப மாநாத ராகத் துறைவோனே’, ’கீத கிண்கிணிப் பாதா’ என்றெல்லாம் முருகனைப் போற்றிய அருணகிரியாரின் பாடல்களில் பழங்காலப் பண்களின் பெயர்களையும், தற்காலத்தில் வழங்கும் வராளி, கௌளை, பயிரவி, லலிதா, தன்யாசி போன்ற பல இராகங்களின் பெயர்களையும் சுட்டியுள்ளார்.உற்கடித சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக,, கண்டச் சம்பதிப் பேதமாம் பல, கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படிஎன்னும் பல தாள வகைகளையும், உடுக்கை, துடி, மத்தளம், முரசம், தவில், டோல், கைப்பறை, தம்பட்டம், துந்துமி, முழவு, பம்பை, டமருகம், வேய்ங்குழல், யாழ், வீணை , இன்னும் பல்வேறு இசைக் கருவிகளின் பெயர்களையும் அவர் பட்டியல் இட்டுள்ளதைப் பார்க்கலாம்இசைக் கருவிகளில் எழும் ஓசையை ஒலிப்பதிவு செய்தது போன்ற ஒலிக்குறிப்புகளைப் பல பாடல்களில் காண்கிறோம். காட்டாகச் சில:  

பறை ஒலி :
திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
(பாடல் தொடக்கம்: முத்தைத்தரு)
..
முரசொலி:
குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ...... எனதாளங்
குரைசெய் முரசமொ டரிய விருதொலி
     டமட டமடம டமட டமவென
          குமுற திமிலைச லாரிகி னரிமுத ...... லிவைபாட
(பாடல் தொடக்கம்: கமரி மலர்குழல்)
இப்பாடல் வழியாக, அருணகிரியாரின் திருச்செவியில் ’டமட டமடம’ என்று ஒலிக்கும் முரசம் குமர குருபர, குமர குருபர’ என்ற சந்தத்தில் இசை பாடுவதை நாம் உணர்கிறோம்.

தமருக ஒலி:
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
     கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
          தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
     தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
          திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா 
(பாடல் தொடக்கம்அமுதுததி)

கூத்தியல்:  இறுதியாக, மேற்சொன்னவாறு பலவகைத்தான தாளங்கள் பொருந்திய சந்த இசைப் பாடல்கள் நாட்டியம் ஆடுவதற்குத் தகுந்தவாறு அமைந்திருப்பதால், கூத்தியல் வல்லுநர்களுக்கு அருணகிரியாரின் பாடல்கள் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கித் தந்துள்ளன. இதிகாச புராணங்களில் காணும் பல நிகழ்ச்சிகள் நாட்டியங்களிலும் நாடகங்களிலும் நடித்துக் காட்டும் வண்ணம் அமைந்து மக்களைக் கவரும். இதை நன்கு உணர்ந்தவர் போல, அருணகிரியார் பல திருப்புகழ் பாடல்களில் அத்தகைய நிகழ்ச்சிகளைஒளிப்பதிவுசெய்து தருகிறார். அவற்றில் சில:

இராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி:
........
குடக்குச் சிலதூதர் தேடுக
  வடக்குச் சிலதூதர் நாடுக
    குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
   யினித்தெற் கொருதூது போவது
     குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
   அரக்கர்க் கிளையாத தீரனு
     மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென்(று)
அருட்பொற் றிருவாழி மோதிர
   மளித்துற் றவர்மேல் மனோகர
     மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே
(பாடல் தொடக்கம்: உடுக்கத் துகில்)


பிரகலாத சரிதத்தில் ஒரு நிகழ்ச்சி:
......
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
  பொ¢யவன் கற்பிக் கப்படு சுக்ரன்
    குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ்  சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
  கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
    குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
  துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
    புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்  ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
  பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
    புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும்  பெருமாளே.
(பாடல் தொடக்கம்செறிதரும்)

இங்கு, காஞ்சியில் திருமேற்றளி என்ற இடத்தில் திருஞானசம்பந்தர் உருவில் முருகன் வந்து, சிவசாரூபம் பெறத் தவம் செய்த திருமாலை லிங்க வடிவமாக்கினார் என்னும் காஞ்சிப் புராணக் குறிப்பைச் சுட்டும் அருணகிரியாருடைய தல புராண அறிவைக் காண்கிறோம்.

இவரது படைப்புகள் யாவிலும் காணும் சொல் நயமும், பொருள் நயமும், யாப்பு அழகும், கருத்தழகும் சேர்ந்து, “வாக்குக்கு அருணகிரிஎன்று ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பட்டத்தை இந்த மாபெரும் கவிஞருக்கு வாங்கித் தந்துள்ளது. திருப்புகழையும் அதன் ஆசிரியப் பெருமானையும் போற்றுகின்ற பாடல்கள் பல உள்ளன. “ஐயா! அருணகிரி அப்பா! உனைப்போல மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்?என்று தாயுமான அடிகளார் வியந்து போற்றும் இத் தமிழ்ப் பெருந்தகைக்கு இணையாக எவருமிலர்.

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத்
திருப்புகழை நித்தம் செபிக்க - திருப்புகழை
அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே கூற்றைவென்று
கர்சிக்க லாமே கடி
என்ற செய்யுளை நினைவில் கொண்டு, நான் முயன்ற ஒரு சந்த விருத்தப் பாடலோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்

 குரு வணக்கம் 

எந்தனுள மேவு மீசன் பாலன்
.. இந்தவுல காளும் வீரன் சீலன்
... என்றுமடி யாரின் தோழன் வேலன்                                   புனையாளும்
........இன்பகுற மாது மேவுந் தோளன்
........ இந்திரவு லோக யானை தேடிப் 
........... பின்செலு வினோதன் பேரில் காதல்             மிகவாகித்                                                                            
                                                         
தந்தனன தானத் தானத் தான
....தந்திமிதி மீயென் றோடுங் கோலச்
.... சந்தமிகு பாடல் பாடித் தேனின்                                          இனிதான
........செந்தமிழ்கு லாவி யாடச் சீரார்
.......,..கந்தரலங் கார மோடு  பூதி
.............வந்தவிதங் கூறி வேதப் போதம்                               இதுதானென்(று)                                        

அந்தமுமி லாவந் தாதி மேலாம்
....ம்ந்திரமு மாய்வ குப்பும் பாடி
......அந்தவெழு கூற்றி ருக்கை யோடு                                    பரசூரர்                                         
..........வெந்தழிய வீரத் தோகை ஆடும்
..............செம்பொன்மயில் சேவல் வேலைப் பாடும்
.................. செல்வதமிழ் பேணும் கோவே தேவே              குருவேநீ                                                                                               
பந்தமடை யாமற் காக்கும் பாடல்
....தந்தவிதம் கூறித் தாளைப் போற்றி              
......வென்றுலக வாழ்வில் மேன்மை காண                        வழிதேடும்
  ........இந்தஎளி யேனும் தேறக் காட்டு(ம்)
   ...........மந்திரம தாயுன் நாமம் பாடத்
    .....,,,,,,,,தந்ததனி நாத! தாயும் தாதை                                   அனையோனே!                              

(இங்குச்  சுட்டப்பட்டுள்ள அருணகிரியார் அருளிய பாடல்கள் வரிசை: திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்புகள், திருவெழுகூற்றிருக்கை, திருவிருத்தங்கள்.)

சமய சமரசத்திற்கு வித்திட்ட முத்தமிழ் வித்தகர், அருட்கவி அருணகிரியாரின் திருநாமமும் திருப்புகழும் உலகெங்கிலும் ஒலித்து மாந்தரிடையே அன்பும் அவிரோதமும் நிலவ எல்லாம் வல்ல இறையின் அருளை வேண்டுவோமாக!