குமரகுருபரர்
வே.ச.
அனந்தநாராயணன்
தமிழ் இலக்கிய
வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தோரின் பட்டியலில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த
குமரகுருபரர் ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள பெருந்தகை ஆவார் (1,2). பதினைந்தாம் நூற்றாண்டில்
வாழ்ந்த அருணகிரிநாதருக்குப் பின்னர் சற்றுத் தொய்ந்திருந்த தமிழ்க் கவிதை இலக்கியத்திற்குப்
புத்துயிர் ஊட்டிய பெருமை கொண்டவர் இவர். குறிப்பாக,
சிற்றிலக்கியச் செய்யுள் வகைக்குக் குமரகுருபரர் அளித்த கொடை மாணப் பெரியதாகும். இந்தக்
கட்டுரையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அத்தோடு பின்னிப் பிணைந்துள்ள அவரது இலக்கியப்
பணியையும் சுருக்கமாகக் காண்போம்.
1625-ஆம் ஆண்டில்
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்கைலாயம் என்னும் ஊரில் சைவவேளாள குலத்தில் பிறந்த குமரகுருபரர்
தமது ஐந்து வயது வரை பேச்சுத் திறனின்றி இருந்ததாகவும், பின்னர் திருச்செந்தூர் முருகப்
பெருமானிடம் அவருடைய பெற்றோர் செய்த வழிபாட்டால், பேசுதல் மட்டுமன்றி செய்யுள் இயற்றும்
ஆற்றலும் அடைந்ததாகவும் கூறுவர். அக்காலத்தில் அவர் இயற்றிய முதல் நூலான ‘திருச்செந்தூர்க்
கந்தர் கலிவெண்பா’ அவரது இலக்கியப் புலமையையும் ஆன்மிக முதிர்ச்சியையும் நன்கு வெளிப்படுத்துகிறது
(3). அதையடுத்துத் தமது ஊர்க் கோயில் தெய்வமான கைலாசநாதர் பேரில் அவர் இயற்றிய ’கைலைக்
கலம்பகம்’ என்னும் நூலும் பின்னர் மதுரையில் தங்கியிருந்தபோது இயற்றிய ‘மதுரைக் கலம்பக’மும் சிற்றிலக்கியத்தின் ஒரு முக்கிய உறுப்பாகிய கலம்பகச்
செய்யுளில் குமரகுருபரருக்கு இருந்த புலமையைக் காட்டுவன. அவர் மதுரையில் இருக்கையில்
யாத்த மற்றொரு நூலான ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ சொல்லழகும் பொருளாழமும் கொண்ட ஒரு
படைப்பாக அமைந்து பிள்ளைத் தமிழ் இலக்கணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இதனைத் திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றுகையில் மீனாட்சியம்மையே ஒரு சிறுமி
வடிவில் வந்து புலவருக்கு முத்துமாலை அணிவித்து மகிழ்ந்ததாகச் சொல்வர். ’மதுரை மீனாட்சியம்மை
குறம்,’ மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை’ என்னும் பாடல்களும் மதுரையில் இவர் இருக்கையில்
இயற்றப்பட்டனவாகும்.
குமரகுருபரர்
பயணம் செய்த அடுத்த சிவத்தலமான திருவாரூரில் கோயில் கொண்டுள்ள தியாகராசர் பேரில், நான்மணி
மாலை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த ‘திருவாரூர் நான்மணி மாலை’ என்னும் நூலை
இயற்றினார். இது, வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நால்வகைப்
பாவினங்கள் அந்தாதித் தொடையாக வரும்படி அமைக்கப்பட்ட நூலாகும்.
சைவசமயக் கோட்பாடுகளில்
மிக்க ஈடுபாடு கொண்டிருந்த குமரகுருபரர், அக்காலத்தே திருக்கயிலாய பரம்பரையைச் சார்ந்த
தருமபுர ஆதீனத் தலைவராக விளங்கிய மாசிலாமணித் தேசிகரை அண்டி, அவரது ஆணைப்படி சிதம்பரத்திற்குச்
செல்கையில், வழியில் உள்ள வைத்தீசுவரன் கோயிலில் தங்கி ஆங்குள்ள முருகப் பெருமான் பேரில்
‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்’ என்னும் அழகிய நூலை இயற்றினார். பின்னர் சிதம்பரத்தில் இருக்கையில், ‘சிதம்பர மும்மணிக்
கோவை’, ‘தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை’, ‘நீதிநெறி விளக்கம்’, ’சிதம்பரச் செய்யுட்கோவை’
ஆகிய நூல்களைப் படைத்தார். இவற்றுள் கடையது தமிழ் யாப்பிலக்கணத்தைச் சைவம் சார்ந்த
மேற்கோள் செய்யுள்களோடு தெளிவாக விளக்கும் அரிய கையேடாகும். திருக்குறளை அடிப்படையாகக்
கொண்ட ‘நீதிநெறி விளக்கம்’ இன்றும் பலராலும் பயன்படுத்தப்படும் அறநெறி நூலாக விளங்குகிறது.
இதன் பின்னர்,
குமரகுருபரர் தமது குருவின் பேரில், ‘பண்டார மும்மணிக் கோவை’ என்னும் துதி நூலை இயற்றினார்.
அவரது ஆணைப்படி, அக்காலத்தில் காசி நகரை ஆண்டுவந்த டில்லி பாதுஷாவை அணுகி, அவரிடம்
காசியில் சைவமடம் ஒன்றை நிறுவ அனுமதி பெறச் சென்றார். அங்கு, ’சகல கலாவல்லி மாலை’ என்னும்
கலைவாணியைத் துதிக்கும் பத்துப் பாடல்களைக் கட்டளைக் கலித்துறை யாப்பில் இயற்றினார்.
அதன் விளைவாகப் பாதுஷாவிடம் இந்துஸ்தானி மொழியில் உரையாடும் திறனைப் பெற்று, அவருடைய
அனுமதி பெற்றுக் கேதார கட்டம் என்னும் இடத்தில் குமாரசாமி மடம் என்னும் பெயரில் சைவமடம்
ஒன்றை நிறுவினார். அதன் பின்னர் 1720-ல் திருப்பனந்தாள் நகரில் அமைக்கப்பட்ட மடம் இன்றும்
காசிமடம் என்று அழைக்கப்படுகிறது. காசிநகர் சிவபெருமானைப் பற்றிய ’காசிக் கலம்பக’மும்
இவரது பதினைந்து அற்புதச் செய்யுட் படைப்புகளில் ஒன்று.
தமிழுக்கும் சைவ
சமயத்திற்கும் குமரகுருபரர் ஆற்றிய பணி வியந்து போற்றற்குரியது. அவரது செய்யுட்கள்
ஒவ்வொன்றின் சிறப்பையும் பற்றி விரித்துக் கூறின் கட்டுரையின் அளவு மிகும். ஆர்வமுள்ளோர்
‘குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு’ (2) என்னும் தொகுப்பைப் படித்துப் பயன் பெறலாம்.
குறிப்பு: பள்ளியிறுதி வகுப்புத்
தேர்வில் தமிழில் மாகாண முதன்மை பெற்றதற்காக, திருப்பனந்தாள் மடம் அளித்த ‘காசிவாசி
அருள்நந்தித் தம்பிரான் பரிசை’ப் பெற்ற யான் குமரகுருபரர் பற்றி எழுத இங்கு ஒரு வாய்ப்புக்
கிட்டியதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
துணை நூல்கள்:
1) ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம், மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் வெளியீடு, 1965.
2. அ) குமரகுருபரர்: ஓர் அறிமுகம் http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012251.htm;
ஆ) குமரகுருபரர் http://www.shaivam.org/ad_kumaraguruparar.htm
3. குமரகுருபரர்
பிரபந்தத் திரட்டு: பகுதி 1&2, உரையாசிரியர்: அ. மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம்,
சென்னை 2004.