Friday, February 3, 2012

சிதம்பர தரிசனம்





உ சிவமயம்
திருச்சிற்றம்பலம்

                           சிதம்பர தரிசனம்

1. திருக்கோவிலூர் நோக்கி:

2011 டிசம்பர் 30-ஆம் தேதியன்று காலை 8 மணிக்குத் திருச்சி எக்ஸ்பிரஸ்ஸில் சென்னையிலிருந்து ரயிலில் விருத்தாசலம் சென்று அங்கிருந்து டாக்ஸியில் ஸத்குரு ஸ்ரீ ஞானந்தஸ்வாமிகளின் ஆச்ரம் (தபோவனம்) இருக்கும் திருக்கோவிலூருக்குச் செல்வதாக ஏற்பாடு. அதற்கு முதல்நாளிலிருந்தே சென்னையிலும் தெற்கே கடற்கரை ஓரத்திலுள்ள கடலூர் போன்ற இடங்களிலும் கனத்த மழைபெய்யத் தொடங்கியிருந்தது. அதன் விளைவைப் பற்றிச் சற்றும் எண்ணிப் பாராமல் நான் ரயிலில் கிளம்பியது முட்டாள்தனம் என்பது நான் முன்னமே ரிஸர்வ் செய்து அமர்ந்திருந்த திருச்சி எக்ஸ்பிரஸ் கான்ஸல் ஆகிவிட்டது என்று (கடைசி நிமிஷத்தில்!) அறிவித்தபோது தெரியத் தொடங்கியது. விழுப்புரம் வழியாகச் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இருக்கிறது, உடனே சென்றால் அதைப் பிடிக்கலாம் என்று யாரோ சொல்ல,4 ப்ளாட்ஃபார்ம் தாண்டிச் சென்று அதில் unreserved பயணியாக ஏறினேன். மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் தயவால் உட்கார இடம் கிடைத்தது. 1 மணி நேரத் தாமதத்திற்குப் பின் காலை 9 மணியளவில் வண்டி கிளம்பியது. மற்றும் 7 ட்ரைன்கள் கான்ஸல் ஆனதால், போகும் வழியில், தாம்பரம், செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் குமுகுமுவென்று வண்டிக்குள் பயணிகள் ஏறி ஊசி குத்த இடம் இல்லாமல் ஆனது. போகும் இடமெல்லாம் நல்ல மழை அதனால் அடிக்கடி வண்டி நிற்கவேண்டியதாயிற்று.காலை 11 மணிக்கு விழுப்புரம் அடைந்திருக்க வேண்டிய நான் மாலை 5 மணிக்கு அங்கு சேர்ந்தேன்.கொட்டும் மழையையும் குளிரையும் தாங்கிக்கொண்டும், பெட்டி, பைகளைத் தூக்கிக்கொண்டும் படி ஏறி இறங்கி, ஸ்டேஷன் வாயிலுக்கு வரும் வழியில் மார்பிள் தரையில் தேங்கியிருந்த நீரால் கால்வழுக்கி விழுந்து எழுந்து, பின் வெளியில் வந்து திருக்கோவிலூருக்கு டாக்ஸி பிடிக்க முயன்றபோது, விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும் மழையால் விழுந்த மரங்களாலும், மண்சரிவினாலும் அடைக்கப் பட்டுள்ளதால், அங்கிருந்து அன்றைக்கு எங்கும் செல்ல இயலாது எனத் தெரிந்துகொண்டேன். அத்தோடு, 2-நாட்களாக மின்சாரம் இல்லாததால் ஹோட்டல்கள் மூடப்பட்டுத் தங்க இடமும் உணவும் (தேநீர் உட்பட) கிட்டாது என்றும் சொன்னார்கள். வழியில் ஏதும் சாப்பிடாததாலும், பயண அலுப்பாலும் களைத்திருந்த நான் ஸ்டேஷன் வெயிட்டிங் அறையில் மற்றும் பலரோடு ஒரு மூலையில் உட்கார்ந்து, நான் திருக்கோவிலூரில் தங்க இருந்த ஞானானந்தர் தபோவனத்திற்குத் அலைபேசி செய்ய முயன்றேன். லைன் சரியாகக் கிட்டாமல் ஒருவரையும் தொடர்புகொள்ள இயலவில்லை. இறுதியில், சுமார் 8 மணிக்கு தபோவனத்தை நடத்தும் ஸ்ரீ நித்யானந்தகிரி ஸ்வாமிகள் ஒரு டாக்ஸியை அனுப்புவதாகத் அலைபேசியில் தெரிவித்தார். அதன்படி வந்த டாக்ஸியில் ஏறி அமர்ந்தேன். வழிநெடுக வாழை, கரும்புத் தோட்டங்கள் நாசமாகி இருப்பதையும் மரங்களும் மண்சரிவும் இருப்பதையும் பார்த்தேன். டாக்ஸி ஓட்டுநர் மிக ஜாக்கிரதையாக ஓட்டிச் செல்ல ஆச்ரமத்தை அடைந்தேன்.. அது மின்சாரம் இல்லாததால் இருண்டு கிடந்தது. ஆச்ரம விடுதியில் (ஞானானந்த நிகேதன்) எனக்காக ஒதுக்கிவைத்திருந்த உணவை உண்டபின், சாலைக்கு எதிர்ப்புறம் உள்ள ஞானானந்த ஆச்ரமத்தைச் சார்ந்த கோவிலுக்குச் சென்று இரவுகால பூஜையைப் பார்த்தபின் விடுதிற்கு வந்து என் அறையில் மின்விசிறி ஓடாததால் சுதந்திரமாகப் பறந்து வந்து கடித்த கொசுக்களையும் கவனியாது உறங்கிப் போனேன்.

2. ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தர் ஆராதனை விழா:

நான் திருக்கோவிலூரில் உள்ள ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகளின் தபோவனத்தில், அந்த ஆச்ரமத்தின் தற்போதையத் தலைவரான ஸ்ரீ நித்யானந்தகிரி ஸ்வாமிகளின் அழைப்பின் பேரில், ஞானானந்த நிகேதனில் 6 நாட்கள் (2011டிசம்பர் 30- 2012 ஜனவரி 4 வரை) இருந்தேன். தபோவனத்தில் அப்போது ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகளின் 10-நாள் ஆராதனை விழா தொடங்கியிருந்தது. ஞானானந்த நிகேதனுக்கு எதிராக (நிறைய வாகனப் போக்குவரத்து இருக்கும்) சாலையைக் கடந்துள்ள கோவிலில் ஹோம,யக்ஞங்கள், நான்கு வேதம், பகவத்கீதை பாராயணங்கள், சங்கர பாஷ்ய விளக்கம், குரு பாத பூஜை உட்படப் பல பூஜைகள், பஜனைகள், ஜனவரி 3-ல் தொடங்கி, ஸ்ரீ கிருஷ்ணப் ப்ரேமி அவர்களின் பாகவத ஸப்தாஹ உபன்யாஸம் என்று பலவகையான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஒரே காலத்தில் நிகழ்வதைப் பார்க்க, கேட்கக் கண்களும் செவிகளும் பதினாயிரம் வேண்டும். நான் தங்கியிருந்த ஞானானந்த நிகேதனில் ஸ்ரீநித்யானந்தகிரி ஸ்வாமிகளின் இருப்பிடத்தில், அவரைத் தரிசிக்கப் பலர் வந்தவண்ணம் இருந்தனர். அங்கு வழக்கமாக நடக்கும், ஸன்யாஸிகளுக்கான வேதாந்த வகுப்புகள் அச்சமயம் தள்ளிப் போடப்பட்டிருந்தன. நான் சென்ற சமயம், போர்ச்சுகல்,ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும், இந்தியாவில் ஒரிஸ்ஸாவிலிருந்தும் துறவிகளும், துறவறத்தை நாடி வந்திருந்தவர்களும் (2 பெண்மணிகள் உட்பட) இருந்தனர். அவர்களுடனும் ஸ்வாமிஜியுடனும் உரையாடுவது மிகப் பயனுள்ளதாக இருந்தது. நாலைந்து நாட்களாக மின்சாரம் நின்றுபோயிருந்தாலும், ஜெனெரேட்டர் வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஞானானந்த நிகேதனின் குறிக்கோள் ஆத்ம விசாரம் செய்ய விழைபவர்களுக்கான சூழ்நிலையையும் பயிற்சியையும் கொடுப்பது. தற்போது எண்பது வயதைக் கடந்த ஸ்ரீ நித்யானந்தகிரி ஸ்வாமிகள் ஸத்குரு ஸ்ரீ ஞானந்த ஸ்வாமிகளின் தபோவனத்திற்கு 1971-ல் வந்து, அங்குத் துறவற தீட்சை பெற்றவர். 1974-ல் ஸத்குருவின் மஹாஸமாதிக்குப்பின், ஆச்ரமத்தை நிர்வகித்து வருவதோடு, ஞானானந்த நிகேதனை நிறுவி, அங்குத் துறவிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். மிகவும் எளிமையான தோற்றத்துடன் எவரிடமும் எளிதாகப் பழகும் இவர் வேதாந்த விசாரத்தில் ஆழ்ந்த அறிவும் ஞானமும் பெற்றவர். தமது குருவின் சரிதத்தையும் உபதேசங்களையும் கொண்ட ஸ்ரீ ஞானானந்த தரிசனம் என்னும் நூலை வெளியிட்டுள்ள(1996-ல்) இவர், பஞ்சதசீ (2 பாகம்) என்னும் 15 வேதாந்த கிரந்தங்களைக் கொண்ட ப்ரகரணம் போன்ற அரிய வேதாந்த நூல்கள் பலவற்றை நூலகத்தில் சேகரித்தும், மீள்பதிப்புச் செய்தும் உள்ளார். இவர் பதிப்பித்துள்ள ஆவுடையக்காள் சரிதம் என்னும் நூல் பற்றி முன்னம் இங்குக் குறிப்பிட்டிருக்கிறோம். ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தர், பகவான் ஸ்ரீரமணர் ஆகியோரைப் போல ஆன்ம விசார மார்க்கத்தைப் பற்றிய பல உரைகள் நிகழ்த்தியுள்ளார். வேதம், உபனிஷத், ஸம்க்ருத ஆன்மிக நூல்கள் ஆகியவற்றில் மட்டுமன்றி, திருப்புகழிலும்,திருமுறைகளிலும் (குறிப்பாகத் திருவாசகத்தில்) தாயுமானவர் பாடல்களிலும் மிகவும் நாட்டமும் தேர்ச்சியும் கொண்டவர். (டிசம்பர் 13,14 தேதிகளில், ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்களின்’திருக்குறளும் கீதையும்’ என்ற தலைப்புக் கொண்ட உரையும் திருவாசகம் முற்றோதலுமாக விழா ஒன்று நடத்தியுள்ளார்.) அவரது நூலகத்தில் பிரமிக்கத்தக்க அளவு அரிய நூல்களைக் காணலாம். அவற்றை எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் தமது விளக்க உரையோடு பதிப்பிக்க அவர் மிகவும் ஆவலாய் இருக்கிறார். அப்பணிக்கேற்ப அவரது உடல்நலம் நன்கு இருக்க இறைவனை வேண்டிக்கொண்டேன். தமது ஆச்ரமத்தில், பலநாடுகளிலிருந்து வரும் துறவுப் பாதையில் செல்ல விழைவோருக்கு தங்கிப் படிக்க, சாதனம் செய்ய வசதி செய்துள்ளார். நான் தங்கியிருந்த சிலநாட்களில், சங்கரி என்று பெயரை ஏற்றுக்கொண்ட ஸ்பானியப் பெண்மணி,ஜெஸ்ஸிகா என்ற இன்னொரு ஸ்பானியப் பெண்மணி, ஆனந்த சைதன்யா என்ற பெயர் பூண்ட போர்ச்சுகல் நாட்டுத் துறவி ஆகியோர் இருந்தனர். பின்னர் ஜெர்மனியிலிருந்து சிலர் வருவதாகச் சொன்னார்கள். ஸ்ரீ ஞானானந்த ஆராதனை நடந்து வந்ததால், வழக்கமாக அவர்கள் நிகழ்த்தும் உபனிஷத், கீதை, சங்கர பாஷ்யங்கள் பற்றிய ‘வகுப்புகள்’ நடைபெறவில்லை. உணவு உண்ணுமுன் அங்குள்ள அனைவருமாக கீதையின் 15-வது அத்தியாயத்தைப் பாராயணம் செய்வது காணவும் கேட்கவும் அருமையாக இருந்தது.

3. திருவண்ணாமலை தரிசனம்:

திருக்கோவிலூரில் இருக்கும்போது நடுவில் ஒருநாள் திருவண்ணாமலைக்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது. அதன்படி, ஜனவரி 3-ஆம் தேதி காலை6.30-க்கு டாக்ஸி பிடித்து, திருவண்ணாமலைக்குச் சென்றேன். முதலில் ரமணாச்ரமத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியன் தம்பதியரைச் சந்தித்தேன். நான் வருவது பற்றித் தபோவனத்திலிருந்து தெரிந்து கொண்டிருந்த அவர்கள், முதலில் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தந்த சிற்றுண்டியைப் பெற்றுக்கொண்டு, நான் வேஷ்டி உடுத்திக் கொண்டபின், என்னைக் கோயிலில் நடைபெறவிருக்கும் காலைப் பூஜைக்கு அழைத்துச் சென்று ஸ்ரீஅண்ணாமலையான் சன்னிதியில் இறைவன் திருவுருவத்திற்கு நேர்முன்பாக அமர்த்தித் தரிசிக்க வைத்தார்கள். இது கனவா நினைவா என்று ஐயம் மனத்தில் எழ, அருணாசலேச்வரனைக் கண்ணால் பருகினேன். பின்னர், அண்ணாமலையாருக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் நடக்கப் போவதாகக் கூறி என்னை அபிஷேகப் பொருள்களை (பழங்கள், நெய்,இளநீர், சந்தனம்..) தயார்செய்யும் இடத்திற்குக் கூட்டிச் சென்று காட்டியபின், சுவாமி சன்னிதியில் சுமார் 1 மணி நேரமும், பின்னர் அம்மன் சன்னிதியில் அதே நேரமுமாக நடந்த அபிஷேகங்களை முற்றிலுமாகக் காணும்படி, நேர் முன்பாக அமர்த்தி வைத்தனர். இந்த பாக்கியம் போதாதென்று, அருகில் இரண்டு ஓதுவார்கள் (-அவர்களில் ஒருவர் அண்ணாமலைப் பலகலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்-) நெக்குருகப் பல திருமுறைப் பதிகங்களைப் பாடினார்கள். இதற்கெல்லாம் நான் தகுதியற்றவன் என்று என் உள்மனம் அழுத வண்ணம் இருந்தது.

அதன் பிறகு, ரமணாச்ரமத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டி முடித்த Ramana Maharshi Archives என்னும் temperature- and humidity-controlled கட்டிடத்தினுள்ளே அற்புதமான முறையில் சேகரிக்கப்பட்டு வைத்திருக்கும் ஏராளமான அரிய புகைப் படங்கள், சிலைகள், பெரிய (நீல நிறத்து) லிங்கம்,ரமணரின் கையெழுத்தில் உள்ள படைப்புகள், ஓலைச் சுவடிகள், அவர் அன்றாடம் பயன்படுத்திய பொருள்கள் (கைத்தடி, கண்ணாடி, போன்றவை) ஆகியவற்றை அந்தக் காட்சி சாலையைப் பாதுகாக்கும் பெரியவர் காண்பித்தார். பிரமிக்க வைக்கும் காட்சி அது.

இறுதியாக, ரமணர் புத்தகாலயத்தில், 11 மணிக்கு அது மூடுவதற்கு முன்பாகச் சில நூல்கள் (குறிப்பாக, T.R. கனகம்மாள் அவர்களின் விளக்கவுரை கொண்ட ஸ்ரீ ரமண நூல் திரட்டு உரை, 2 பாகங்கள்- மிகவும் அருமையான படைப்பு - வாங்கிகொண்டு, சிறிது நேரம் ரமண மண்டபத்தில் அமர்ந்து தரிசனம் செய்தபின், ஆச்ரமத்தில் உணவு உண்டேன். கிரிப் பிரதக்ஷணத்திற்கு நேரமில்லாததால், தூர இருந்தே மலையை வணங்கி விடைபெற்று, டாக்ஸியில் திருக்கோவிலூருக்கு சுமார் 2.30-க்குத் திரும்பினேன். 3 மணிக்குத் தபோவனம் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணப் ப்ரேமி அவர்களின் மூன்றாம் நாளைய பாகவத உபன்யாசத்தில் அமர்ந்தேன். (2-ஆம் நாளிலிருந்து அவர் பிற்பகல் 3-5, மாலை 7-9 என்று ஒரு நாளைக்கு இருமுறை உபன்யாஸம் நிகழ்த்தினார்; என்னால் 4-ஆம் தேதிவரை தான் கேட்க இயன்றது).

ஜனவரி 4-ஆம் தேதி காலை திருக்கோவிலூரில் பெண்ணையாற்றுக்குத் தென்புறம் இருந்த அருள்மிகு வீரட்டேச்வரர் கோவிலுக்குச் சென்றேன். அட்ட வீரட்டானத் தலங்களில் இரண்டாவதான இங்கு, சிவபெருமான் அந்தகாஸுரனை வதம் செய்து அந்தகாஸுரவத மூர்த்தி என்றும், அம்பிகை பெரியநாயகி அல்லது சிவானந்தவல்லி என்ற திருநாமத்துடனும், விளங்குகின்றார்கள். மிகப் புராதனமான இந்தக் கோவில் மிக அழகாக இருக்கிறது. சிவபெருமானின் நெடிய லிங்கத் திருவுருவம் அற்புதமான எழிலுடன் திகழ்கிறது. அம்மனும் அழகுத் தெய்வம். தேவார மூவராலும் பாடப் பெற்றது இத்தலம்:

உள்ளத் தீரே போதுமின் உறுதி யாவது அறிதிரேல்
அள்ளற் சேற்றில் காலிட் டிங்கு அவலத்துள் அழுந்தாதே
கொள்ளப் பாடு கீதத்தான் குழகன் கோவ லூர்தனில்
வெள்ளத் தாங்கு சடையினான் வீரட் டானம் சேர்துமே - சம்பந்தர்

மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர்! அந்தகாசுரனை வதம் செய்த இறைவனிடம் இருந்து 64 பைரவர்கள்,64 சக்திகள் தோன்றிய தலம் என்று அறிகிறோம். இங்குள்ள பெரியானை/பெரியாணை-கணபதி என்னும் பெயர் கொண்ட விநாயகப் பெருமான் முன்னிலையில்தான் ஔவையார் விநாயகர் அகவல் பாடிக் கைலாயம் சென்றார் என்று கூறுவர். Refer to the links below:


கோவிலின் உள்பிரகாரத்தில் காணப்படும் உலோகச்சிலை வடிவங்கள் மற்ற இடங்களில் காணாத வகையில் அற்புதமாக உள்ளன.

ஜனவரி 4-ஆம் தேதி இரவு கிருஷ்ணப்ரேமி அவர்களின் உபன்யாசத்திற்கு முன்பாக, திருக்கோவிலூரிலுள்ள பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். அன்றிரவு வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, பெருமாள் பரமபதத் திருக்கோலத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தரும் நிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்து வைத்திருந்த பெருமாளின் அற்புதக் கோலத்தை அலங்கார மண்டபத்திற்குள்ளே காணும் வாய்ப்புக் கிட்டியது. அன்று காலையில் இருந்ததாகச் சொன்ன மிக அதிகமான கூட்டம் நான் சென்ற வேளையில் இல்லை என்பதால் சற்றே நெருக்கமாக இருந்தாலும் நெடிய உருவத்தில் மூவுலகையும் அளக்கும் திருவடியைத் தூக்கியவாறு காணும் பெருமாளின் அற்புத மூல விக்கிரத்தைக் காணும் பேறு கிட்டியது. அத்தோடு, அடுத்த நாள் காலையில் 9 மணி சுமாருக்குச் சிதம்பரத்தில், கோவிந்தராஜப் பெருமாள் கருடவாகனத்தில் வீதிவலம் வருவதைக் காணும் புண்ணியமும் கிட்டியது.

4. சிதம்பர தரிசனம்:

ஜனவரி 5 அன்று,திருக்கோவிலூரிலிருந்து காலை 7 மணிக்கு டாக்சியில் கிளம்பி 8.45-க்கு, சிதம்பரத்திற்கு வந்தேன். அங்குள்ள தீக்ஷிதர்களுள் வயதிலும் அறிவிலும் மிகப் பெரியவரான ப்ரஹ்மஸ்ரீ பரமேஸ்வர தீக்ஷிதரின் இல்லத்தில் பெட்டியை வைத்துவிட்டுக் காலை உணவு அருந்தினேன். (செப்டம்பர் 2011-ல் ப்ரஹ்மஸ்ரீ பரமேஸ்வர தீக்ஷிதர் டொராண்டோ வந்து உரையாற்றியதைப் பற்றி முன்னம் எழுதியிருந்தேன். அவர் என்னைச் சிதம்பரம் திருவாதிரை விழாவிற்கு வரச்சொல்லி அழைத்ததன் பேரிலேயே இந்தத் தடவை சிதம்பரம் சென்றேன். அவருக்கு எத்தனை கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது) நான்கு கட்டுகள் கொண்ட அவரது புராதானமான வீட்டில், அவரது கொள்ளுப் பேரன்,பேத்திகள் உள்பட அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். அத்தோடு, திருவாதிரை விழாவையொட்டி, நான்கு வேதங்களை ஓத தீக்ஷிதர் காசி, கர்நாடகம், தமிழ்நாட்டிலிருந்து வரவழைத்திருந்த சுமார் 75 வேத வித்துக்கள் அவரது வீட்டில் வேதபாராயணம், உணவு நேரங்களில் வந்து போய்க்கொண்டிருந்தனர். அதனால் அந்த இல்லமே ஒரு பெரிய திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அன்று காலை 10 மணிக்கு ஆலயம் சென்று உட்பிரகாரத்தில் 4 வேதங்கள், திருமுறை, திருப்புகழ் முற்றோதல், 18-புராணம் ஆகிய பாராயணங்களில் தீக்ஷிதர் உதவியுடன் கலந்துகொண்டேன்.



அதன் பின்னர், தில்லைப் பொன்னம்பலத்தானின் சன்னிதிக்கு அவர் அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தார். எங்கோ உலகின் ஒரு கோடியில் தொலைவில் வாழ்ந்து வரும் என்னை, அவன் தன் முன் நிறுத்தி அற்புதக் கோலத்தில், காஞ்சி மஹாப்பெரியவர் அளித்திருந்த வைரக் கிரீடத்துடன் காட்சி தந்த வேளையில், அந்த அற்புதக் காட்சியைக் காண, முன்பு நான் இட்ட  புலம்பல்களை எல்லாம் (compiled in the form of verses given beneath this paragraph), ஒரு பொருட்டாக மதித்து, இந்த அற்பனையும் தனது ஆனந்த ஸுந்தர அற்புத நடனத்தைக் காண வைத்த கருணையை நினைத்து, என்னை இழந்து அரற்றினேன். அப்போது, என் பின்னால் சிவப்பழமாக விபூதி, ருத்ராக்ஷ மாலை, வேஷ்டி சகிதமாக தேஜஸ்ஸுடன் காணப்பெற்ற ஒரு பெரியவர் என் நிலையைப் புரிந்து கொண்டு, என்னை அரவணைத்துத் தாமும் கண்ணீர் பெருக்கினார். சன்னிதியிலிருந்து வெளிவந்த பின்பு, அவரும் அவருக்குப் பின் அவரைப் போலவே சிவனடியாராய் நின்றிருந்த அவரது நண்பரும் கடந்த 26 ஆண்டுகளாகத் திருவாதிரை விழாவிற்குத்

தவறாமல், ஸிட்னியிலிருந்து (Sydney) சிதம்பரம் வந்து போய்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்கள் என்று தெரிந்து கொண்டேன்.அதன் பிறகு அவ்விருவரும் எனக்கு ஒவ்வொரு நாளும் உறுதுணையாக இருந்து, ‘எந்தெந்த நிகழ்ச்சிகள் எப்போது நடக்கும், அவற்றைக் காண நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கற்பித்து, தாங்களும் கூடவே இருந்து, கூட்டத்தின் இடிபாடுகளை எல்லாம் சமாளித்து, அம்மையப்பனை அருகில் தரிசிக்க உதவினார்கள். நடராஜ தத்துவம் பற்றி நன்கு அறிந்து, அவனையே தங்கள் மூச்சுக் காற்றாகக் கொண்டு வாழும் இந்த சிவ பக்தர்களின் நட்புக் கிட்டியதை என் பூர்வ ஜன்ம புண்ய பலனாகக் கருதி நெகிழ்ந்து போகிறேன்..

         __________________________________________________________________________________

     கைதட்டி எனையழைத்துக் கனகசபை நடுவினிலே

ஐயா!நீ ஆனந்த மாகநடம் ஆடிநிற்க

மெய்சிலிர்க்கக் கண்பனிப்ப விதிர்விதிர்த்து நான்நிற்க....

ஐயோவே! அதுகனவாய் ஆனதுந்தான் முறையாமோ?



ஒய்யார மாகஇடத் தொருகாலைத் தூக்கிநிற்கத்

தையலவள் அருகிருந்து தாளமுந்தான் கூட்டிநிற்கத்

தையத்தாம் என்றாடும் தாண்டவம்நான் பார்த்துநிற்க.....

ஐயோவே! அது கனவாய் ஆனதுந்தான் முறையாமோ?



கைகால்வாய் கண்களுடன் காதெல்லாம் கூட்டிவைத்து

மெய்யென்னும் நீபடைத்த மேனியிது வீழுமுனம்

வையத்துச் சொர்க்கமென விளங்குதில்லை தனில்உன்னை

ஐயோ!நான் காணாமல் அழிவதுந்தான் முறையாமோ?



நேரமோ குறையுதென் நெஞ்சுளே உயிர்த்துடி
...நின்றிடும் காலம் மேலும்
....நெருங்கியே வருகுது, நாளெலாம் பாழ்செயும்
.....நீசன்து ராச னேனின்

ஓரவா ரங்களோ ஒருகடு(கு) அளவினும்
...ஒழிந்ததாய்க் கண்டி லே(ன்)உன்
....ஒருவனைத் தவிரவே(று) உலகுள யாவையும்
.....உகந்திடும் உலுத்தன் என்னைப்

பாரமாய்க் கருதிநீ உதறுவாய் என்னும்அப்
...பயத்திலே விதிர்த்து நிற்கும்
....பாவியேன் உய்ந்திடப் பரம!நீ மன்றிலே
.....பாவையோ டாடு(ம்) வேளை

ஓரமாய் நின்றுனை ஒருமுறை பார்த்திட
...உத்தர வளித்தி டாயோ?
....உலகெலாம் அதன்வழி உனதுபே ரருள்வளம்
.....உணர்ந்திட வகைசெய் யாயோ?

_____________________________________________________________________________

அன்று (ஜனவரி 5) உச்சிக்காலத்தில், ரத்னசபாபதி அபிஷேகம் பார்க்கக் கிட்டியது.



[இதுபற்றி இணையத்தில் கண்ட தகவல்: ஒருமுறை, பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை "ரத்னசபாபதி' என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.]



அதன் பிறகு தீக்ஷிதர் வீட்டில் கூடியிருந்த வேதவித்துக்களுடன் மதிய உணவருந்தி, ஓய்வெடுத்தபின், மாலை 4 மணி அளவில், நிருத்த ஸபா மண்டபத்தில் வேதவித்துக்களின் ஸம்மேளனத்தைப் பார்க்கக் கிட்டியது. ஒவ்வொரு வேத கோஷ்டியிலிருந்தும் ஒருவர் தங்களுடைய வேதம் பற்றிய சிறப்புகள், நடராஜரின் மகத்துவம் ஆகியவை பற்றிப் பேசினார்கள். அதேபோல, பதினெண்புராணம், திருமுறை, திருப்புகழ் பாராயணக் குழுவினரும் அவற்றின் சிறப்பையும், தில்லை அம்பலத்தான் பற்றிய பகுதிகளையும் எடுத்துரைத்தார்கள். அன்றிரவு, சுவாமியும் அம்மனும், ராவணன் சுமந்துவரும் தங்கக் கைலாஸ வாஹனத்தில் திருவீதி உலா வருவதைத் தரிசித்தேன். (எல்லா நாட்களிலும் தீக்ஷிதர் வீட்டு வாசலில் விசேஷ மண்டகப்படி இருந்தது.)



அடுத்த நாள், ஜனவரி 6 அன்று, கோவிலின் உள்பிரகாரத்தில், உற்சவர் இருக்கும் அலங்கார மண்டபத்தில், முந்திய நாளின் கைலாஸ வாஹனத்தை மக்கள் காணும்படி வைத்திருந்ததையும், அதை ஒட்டியிருந்த யாகசாலையில், ஆர்த்ரா அபிஷேக, தரிசன பூஜைகளுக்கான யக்ஞ, ஹோமங்கள் இடையறாது நடந்து வருவதையும் கண்டேன். இந்த வருட ஆர்த்ரா அபிஷேகம் செய்யச் சீட்டுக்குலுக்கல் வழி. தேர்ந்தெடுக்கப்பட்ட தீக்ஷிதர், தீவிர நியமங்களுடன் இந்தக் காரியங்களைச் செய்துகொண்டிருந்தார். நடராஜர்-சிவகாமி சன்னிதியில் முதல் நாளைவிட அதிகக் கூட்டம் இருந்தது. அன்றைய காலை தீபாராதனை, உச்சிக்கால ரத்னசபாபதி அபிஷேகம் பார்த்து, பின்பு உணவு, ஓய்வுக்கு அப்புறம், இரவில் பிக்ஷாடனர் கோலத்தில் வீதி வலம் வரவிருக்கும் சுவாமிக்குக் கோவிலில் தீபாராதனை உபசாரம் நடப்பதைப் பார்த்தேன். இரவில் தெற்கு ரத வீதியில், அற்புதமான அழகுடன் பிக்ஷாடனர் ஊர்வலம் வருவதைக் கண்டு களித்தேன்.



அடுத்தநாள் (ஜனவரி 7) தேர்த் திருவிழா. அதற்கான அலங்காரத்தை மூலஸ்தானத்தில் உள்ள நடராஜருக்கு முதல் நாள் இரவிலேயே தொடங்கி, முகம் தவிர மற்ற இடங்களைத் துணியால் மறைத்தபடி செய்வார்கள். அத்தகைய விஸ்தாரமான அலங்காரத்துடன் நடராஜரும் சிவகாமியும் கோவில் உள்பிரகாரத்தில் பவனி வந்தபின், தேரில் ஆரோஹணம் செய்வர். அந்தப் பவனியைக் காண, தக்ஷிணாமூர்த்தி சன்னிதி இருக்கும் தென்புறப் பிரகாரத்தில் நான் காலையில் சென்றேன். அங்கு ஏற்கனவே நிரம்பி வழிந்திருந்த கூட்டத்தில் ஓரிடத்தில் அமர, அங்கிருந்த அன்பர்கள் அனுமதித்தனர். சற்று நேரத்தில், ராஜ கம்பீரத்துடன், பிரகாரத்தின் இருபக்கமுமாக ஆடியவண்ணம் ஐயனும் அம்மையும் நாம் மிக அருகில் காணும்படி தரிசனம் கொடுப்பது புல்லரிக்கவைக்கும் காட்சி. முதன்முதலாக நல்ல வெளிச்சத்தில், செம்பொன் மேனி பளபளக்கப் புன்சிரிப்புடன் அம்மையப்பரின் முன்னழகும் பின்னழகும் அப்போது யாவருடனும் நானும் கண்டேன். அதன் பின்னர் காலை 10 மணி சுமாருக்குத் தெற்கு ரத வீதியில் பஞ்சமூர்த்திகளுடன் மாணிக்கவாசகரும் வர, ஐந்து தேர்களையும், அவற்றில் பெரியதான தேரில், நடராஜப் பெருமான் தங்க ஊஞ்சலில் ஆடி அசைந்தவாறு, பக்தர்களை நாடி வந்து, தரிசனம் கொடுக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டேன். முன்பு குறிப்பிட்ட ஆஸ்திரேலிய அன்பர்களுடன் சேர்ந்து, ஐயனையும் பின்னர் சிவகாமி அம்மையையும், திருத்தேரில் பார்த்தவாறே பின்னோக்கி நடந்து, தெற்கு, கீழ வீதிகளில் தேவாரம், திருவாசகம்; தேருக்கு முன்பும் நான்கு வேத கோஷம்; தேருக்குப் பின்னுமாக முழங்க, அவ்வப்போது, தேர்வடங்களைத் தொட்டுக்கொண்டு நடந்து சென்றேன். மேலே நல்ல வெய்யில். அதைத் தணிக்க, ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் இருந்தன. பின்பு சற்று ஓய்வெடுத்த பின், அன்று மாலை/இரவு நேரத்தில், சுவாமியையும் அம்மனையும் அடுத்தநாளைய ஆர்த்ரா அபிஷேகம் நடக்கும் ஆயிரங்கால் மண்டபத்திற்குக் கொண்டு செல்ல அமைந்துள்ள உயரமான இடத்தில், நல்ல மின்விளக்கு வெளிச்சத்தில் நிறுத்தி, மாணிக்கவாசகர் பல்லக்கை அவர்கள் முன் நிற்கவைத்து, ஓதுவார்கள் 20 திருவெம்பாவைப் பாடல்களைப் பாட, ஒவ்வொன்றிற்கும் பிறகு, தீபாராதனை நடத்தும் உத்சவத்தை, அப்போது கூடியிருந்த ஜன சமுத்திரத்திற்கிடையே ஒரு மூலையில் நின்றவாறு (நசுங்கியவாறு!) காணக் கிடைத்தது. அது முடிந்து, தீக்ஷிதர் வீட்டில் உணவருந்தி ஹோட்டல் அறைக்கு இரவு 11 மணி அளவில் சென்று படுத்தேன். இரண்டரை மணி நேரத்திற்குப் பின் எழுந்து, குளித்தபின், ஆர்த்ரா அபிஷேகத்தைக் காண, அதே ஹோட்டலில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய அன்பர்களுடன் கிளம்பி, அவனருளால், அபிஷேகம் நடக்கும் இடத்திற்கு மிக அருகில் கிடைத்த இடங்களில் அமர்ந்தோம். சுமார் மணி 2.30-க்குத் தொடங்கிய மஹாஅபிஷேகம் 5 மணிவரை நீடித்தது. நூற்றுக்கணக்கான குடங்களில், நீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன் அபிஷேகங்களும் வாளி வாளியாக விபூதி அபிஷேகமும், ஸ்ரீநடராஜ மூர்த்திக்கும், சிவகாமி அம்மைக்கும் நடந்ததைப் பார்த்த காட்சியின் அழகையும் அடைந்த ஆனந்தத்தையும், வார்த்தையில் வடிக்க இயலாது. இறுதியாகச் செய்த தீபாராதனையின் பின், திருவுருவங்களைத் திரைபோட்டு மறைத்து மிக விசேஷமான ஆர்த்ரா தரிசனத்திற்கான அலங்காரங்கள் செய்யத் தொடங்கினார்கள். அதையொட்டிக் கலைந்த கூட்டத்திலிருந்து வெளிவந்து, மண்டபத்தின் உள்ளே சுவாமி -அம்பாளின் ஆர்த்ரா தரிசனத்தைக் காணச் சௌகரியமான இடத்தைப் பிடித்தோம். அங்கும் நல்ல கூட்டம். எனினும், மிக அருகில் அற்புதமாகத் தரிசனம் கிட்டியது. அத்ததைய அழகுக் கோலத்தை முன்னம் எங்குமே நான் கண்டதில்லை (இப்போது கண்டது தில்லையில்). ஞானாகாசத்தில் ஆனந்த நடனம் செய்யும் ஐயனின் திருக்கோலம் அது. அதிலிருந்து, தில்லைப் பொன்னம்பலத்தில் சிதாகாசத்தில் ஆடும் காட்சிதரக் கோயிலுக்குள் சென்று, அங்கு மூலஸ்தான மூர்த்தியாகத் திகழ்வார். அவ்வாறான சித்ஸபா ப்ரவேச மஹா கோலாஹலக் காட்சியைத் தந்தவாறு, ஐயனும் அம்மையும் கோயிலுக்குள் செல்வர். அப்போது இருவரும் இடங்களை மாற்றிய வண்ணம், பல்லக்கில் ஆடிக்கொண்டே செல்லும் காட்சியையும் இன்னொரு இடத்திலிருந்து பார்த்தோம்.



மறுநாள், (ஜனவரி 9) காலை, சுவாமிக்கும் அம்மனுக்கும் தீக்ஷிதர் அர்ச்சனை செய்து தந்த பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு, பிரியவே மனமில்லாமல், மதிய பஸ்ஸில் ஏறிச் சென்னை வந்து சேர்ந்தேன். கானடாவிற்கு (14-ஆம் தேதி) திரும்பிவந்த பிறகும், இந்த இனிய பயணத்தின் நினைவுகள் இன்னும் தொடர்ந்து என் மனத்திரையில் ஓடிய வண்ணம் இருக்கின்றன.



நான் நினைவிலிருந்து எழுதிய ஆர்த்ரா உற்சவத்தைப் பற்றிய செய்திகளில் தவறிருக்க வாய்ப்புள்ளது. அதற்கு உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். … … அனந்த் 29-1-2012

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.